மக்கள் வாழ்வில் பிறப்பு, திருமணம், பிள்ளைப்பேறு, மரணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பல பழக்க வழக்கங்கள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. காலத்துக்குக் காலம் பழக்க வழக்கங்கள் மாறுபடுவதுண்டு. எனினும் உயர் பண்பாட்டுக்கு உரியனவான பழக்க வழக்கங்கள் மாத்திரம் கால வெள்ளத்தையும் கடந்து நிற்கும். சங்க காலப் பழக்க வழக்கங்கள் சிறு வேறுபாடுகளுடன் இன்னும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.
அன்று குழந்தை பிறந்தவுடன் சில சடங்குகள் நிகழ்த்தப் பெற்றன. புதல்வர் பயந்த புனிறு சேர் பொழுதில்
நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயா யாங்கினும் அமரர்ச் சுட்டியும்
செய்பெரும் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
இது தொல்காப்பிய நூற் பாவாகும்
குழந்தைப் பேறு நிகழ்ந்த சில நாட்களுக்குப் பின்னர் எண்ணெய் தேய்த்து முழுகுதலும் பின்னர் பெரியவர்களுக்கும் வீரருக்கும் சிறப்புச் செய்தலும் சடங்குகளாக நிகழ்ந்தன. "பிறந்த புதல்வன் முகம் காண்டலும் ஐம்படை பூட்டலும், பெயரிடுதலும், எல்லா முனிவர்க்கும் அந்தணர்க்கும் கொடுத்தலும்'' என்று நச்சினார்க்கினியர் விரிவுரை எழுதியுள்ளார்'' இவை இன்றும் சில செல்வக் குடும்பங்களில் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
ஐம்படை என்பதை ஐவகைக் கருவிகளைக் குறிக்கும் சொல்லாக பிற்காலத்தார் கொண்டு திருமாலுக்குரிய ஐவøகக் கருவிகளையும் குழந்தைக்கு அணிவித்தனர். ஐம்படைத் தாலி என்று பெயரிட்டு குழந்தைக்கு அணியும் மரபு இன்றும் பஞ்சாயுதப் பதக்கமாக அணிவிக்கப்படும் பழக்கத்தை ஒத்ததாக உள்ளது. குழந்தை பிறந்தவுடன் இறந்தால் அல்லது இறந்து பிறந்தால் அதனை வாளால் வெட்டிப் புதைத்தனர். பிறந்த ஆண் குழந்தை போரில்தான் மடிய வேண்டும் என்று கருதியதால் குழந்தைப் பருவத்தில் மடிந்தாலும் அதனை வாளால் வெட்டிப் புதைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
காலப் போக்கில் இந்தப் பழக்கம் கைவிடப்பட்டிருப்பினும் மந்திரவாதி எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் உடலில் சிறு கத்தியால் காயம் ஏற்படுத்தி அல்லது முள்ளால் கீறி அதன் பின்னர் புதைக்கும் பழக்கத்தை சிலர் இன்னும் கையாள்கின்றனர். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காதலன் காதலிக்கு உறுதிமொழி கொடுப்பதாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. "ஏமுறு வஞ்சினம் வாய்மையில் தேற்றிஅம்தீம் தெண்ணீர் குடித்தலின்'
என்பது குறிஞ்சிப் பாட்டு அடிகள்.
வீரராக இருந்தோருக்கு கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. கல் நடுதல் தொடர்பாக பல்வகைப் பழக்கங்கள் பேணப்பட்டன. கல்லில் இறந்தவர் பெயரைப் பொறித்தல், அதற்கு மயிலிறகு சூட்டுதல், கள், சோறு படைத்து வழிபடுதல் என்று பலவகை.
இன்றும் கல் நடுவதற்குப் பதிலாக கல்வெட்டுப் பாடுகிறோம். தமிழர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பழக்க வழக்கங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. திருமணமாகாத பெண்கள் சிலம்பு அணிதல், திருமணமானவள் மங்கல நாண் அணிதல், கணவன் இறந்ததும் நிற ஆடை, அணிகளை அதிகம் விரும்பாது அவற்றை நீக்கி விடுதல் என்பன பெண்களுக்குரிய பழக்கங்களாக இருந்தன. கணவரை இழந்த பெண்கள் கொடிய துன்ப வாழ்வை ஏற்றிருந்தனர். இந்தப் பழக்கத்தை ஒரு புலவர் குறுந்தொகையில் பெண் குரங்கு ஒன்று கைம்மை நோன்பு மேற்கொண்டதாக எழுதி அந்த அவல நிலையைச் சித்திரித்துள்ளார்.
""கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றெனக்கைம்மையுய்யாக் காமர் மந்தி கல்லாவன் பறழ் கிளை முதற் சேர்த்தி
ஓங்குவரையடுக்கத்துப் பாய்ந்துயிர்
செருக்கும் சாரநாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே''
பெண் குரங்கு, ஆண் இறந்ததும் தனது குட்டிகளை சுற்றத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு கிளையிலிருந்து பாய்ந்து உயிர் விட்டதாம்.
ஆண்களுக்கு எனவும் வழக்கங்கள் இருந்துள்ளன. மடலேறுதல் அதில் ஒன்று எனலாம்.
தாம் விரும்பிய பெண்ணை பெற்றோர் கொடுக்க இசையாத விடத்து பனங் கருக்கால் செய்த குதிரையின் மீது ஆடையின்றி ஏறி பலரும் காண வலம் வந்து தன்னை வருத்துவது மடலேறுதல் ஆகும்.
மனைக்கு விளக்காக உள்ள மகளிர் இரவின் முற்பகுதியில் திருவிளக்கேற்றி அதற்கு மலர் தூவி வழிபட்டனர். காகத்திற்குச் சோறிடுதல், பிறை தொழுதல் என்று மக்கள் பல பழக்க வழக்கங்களை விரும்பி மேற்கொண்டனர். அக்காலத்தில் ஆடவர் பல மனைவியரை மணந்து கொள்ளும் பழக்கம் இருந்ததெனினும் ஒரு தாரத்தோடு வாழ்ந்து வேறொரு பெண்ணை மணக்காமல் வாழ்ந்த ஆடவர் போற்றப்பட்ட சிறப்பையும் காண்கிறோம். பல்லி எழுப்பும் ஓசை, கண் துடித்தலால் நிகழவிருக்கும் நன்மை தீமையை அறிதல் என்ற பழக்கமும் அன்றிருந்துள்ளது.
வெற்றியை விருந்துடன் கொண்டாடும் பழக்கம் அன்றும் இருந்துள்ளது. மக்கள் அன்றாடம் கொள்ளும் பழக்க வழக்கங்களே நாகரிகப் பண்பாட்டுச் செயல் முறைகளாக மாறிவிடுகின்றன. பழக்க வழக்கங்களில் சில மறையும் சில தோன்றும் சில நிலைத்திருக்கும் தன்மையன ஆகும்.
நன்றி :கலைகேசரி இணையதளம்
More